This Article is From Dec 24, 2018

தோல்வியை ஏற்கும் பக்குவம் தலைமைக்கு வேண்டும் - பாஜக தலைவர் பேச்சு

வெற்றிக்கு பல தகப்பன்கள் இருப்பார்கள். ஆனால் தோல்வி என்பது ஓர் அனாதை குழந்தை என்று கூறியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர்.

வெற்றியை விரும்புவதைப் போன்று தோல்வியை எவரும் விரும்ப முன் வருவதில்லை என்கிறார் கட்கரி.

Pune:

தோல்வியையும், பின்னடைவுகளையும் ஏற்கும் பக்குவம் தலைமைக்கு அவசியம் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய சாலைப்போக்குவரத்து கப்பல் துறை அமைச்சருமான நிதின் கட்கரி கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசியதாவது-

வெற்றிக்கு பல தகப்பன்கள் இருப்பார்கள். ஆனால் தோல்வி என்பது ஓர் அனாதை குழந்தையை போன்றது. வெற்றி கிடைக்கும்போது அதற்கு நாங்கள்தான் காரணம் என்று புகழுக்காக பலர் ஓடுவார்கள்.

தோல்வி அடைந்துவிட்டால் ஒவ்வொருவரும் தங்களது ஆட்காட்டி விரலை இன்னொருவர் மீது காட்டுவார்கள். வங்கிகள் சில சமயம் நல்ல வருவாயை ஈட்டி லாபத்தில் இயங்கும். சில சமயம் நஷ்டத்தில் விழுந்து விடும்.

அரசியலை பொறுத்தவரையில், தோல்வி அடைந்து விட்டால் அந்த தோல்வி ஏன் எதற்காக ஏற்பட்டது என்பதை விவாதிக்க ஓர் கமிட்டியை அமைத்து விடுவார்கள். ஆனால், வெற்றி பெற்று விட்டால் அதற்கான காரணம் என்ன என்பதுபற்றி ஆராய மாட்டார்கள்.

சரிவு, பின்னடைவு, தோல்விகளை ஏற்கும் மனப்பக்குவம் தலைமைக்கு அவசியம். தோல்விக்கு பொறுப்பேற்காத வரையில், ஒரு நிறுவனம் மீதான தலைமை அதிகாரிகளின் விசுவாசம் நிரூபிக்கப்படாமல் இருக்கும்.

சட்டசபை, மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் தோற்ற வேட்பாளர்கள் குற்றம் குறைகளை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அப்படி கூறும்போது அவர்களுக்கு இருக்கும் ஆதரவும் போய்விடும்.
இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

.