முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து, சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், கட்சியில் பொதுச்செயலாளர் பதவியையே ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணி நீக்கிவிட்டதாகவும், அதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார்.
மேலும், அரசியல் மாற்றத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக முடிவெடுத்ததாகவும், தங்கள் தரப்புக்கு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தேர்தல் ஆணையம் முறையாக, அனைத்து தரப்புக்கும் தங்கள் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கி, அதன் பின்னரே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது எனக் கூறினார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த பிப்.28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கே இரட்டை இலைச் சின்னம் சொந்தம் என்றும், ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், இதில் டிடிவி தினகரனுடைய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.