This Article is From Aug 20, 2020

தனியார் குத்தகைக்கு விடப்படும் திருவனந்தபுரம் விமான நிலையம்; பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு!

ஒருதலைபட்சமான இந்த நிலைப்பாட்டிற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பை வழங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் குத்தகைக்கு விடப்படும் திருவனந்தபுரம் விமான நிலையம்; பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு!

அதானி குழுமத்திற்கு மூன்று விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • மூன்று விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு அனுமதி
  • தனியார் நிறுவனத்திடம் 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் நடைமுறை
  • கேரள இடது முன்னணி அரசு கடும் எதிர்ப்பு
Thiruvananthapuram:

நாடு முழுவதும் கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல விமான நிலையங்களை பராமரிப்பு மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பினை தனியார் நிறுவனங்களிடம் வழங்குவதை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக மேலும், மூன்று விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதில் திருவனந்தபுரம் விமான நிலையமும் ஒன்றாகும். இந்நிலையில், இந்த மூன்று விமான நிலையங்களை தனியார் நிறுவனத்திடம் 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் நடைமுறைகை்கு கேரள இடது முன்னணி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தை ஒரு சிறப்பு-நோக்கம் நிறுவனமாக மாற்ற வேண்டும் என மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததன் வெளிப்பாடே இந்த தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசின் இந்த நிலைப்பாடானது 2003 ல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்த உத்தரவாதத்திற்கு எதிரானது என்றும், ஒருதலைபட்சமான இந்த நிலைப்பாட்டிற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பை வழங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டில் கேரள அரசு 23.57 ஏக்கர் நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சர்வதேச முனையம் கட்டுவதற்காக இலவசமாக வழங்கியதை குறிப்பிட்ட அவர் இலவசமாக வழங்கியதற்கான நோக்கத்தினையும் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கொச்சி மற்றும் கண்ணூர் விமான நிலையங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது, அவை சிறப்பு நோக்க வாகனங்கள் மூலம் மாநில அரசால் சிறப்பாக இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன என்றும் விஜயன் குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக சில வகைகளின் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது, சில நேரங்களில், வரையறுக்கப்பட்ட கூட்டாண்மையே சிறப்பு நோக்க வாகனம் அல்லது சிறப்பு நோக்கம் நிறுவனம் எனப்படும்.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை பொது-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் குத்தகைக்கு விடுவது குறித்து விவாதிக்க விஜயன் இன்று மாலை 4 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவினை பாஜக எம்.பி. வி முரளீதரன் வரவேற்றுள்ளார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சஷி தரூரும் மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

.