This Article is From Apr 15, 2019

‘பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்…’- தோலுரிக்கும் லெனின் பாரதி #Exclusive

"நமக்கு மோடி மீது எந்த வெறுப்பும் இல்லை. அவர் மீது தனி நபர் விமர்சனமும் இல்லை. அவர் ஏற்றிருக்கும் சனாதனக் கொள்கைதான் நமக்கு எதிரி"- லெனின் பாரதி

Advertisement
தமிழ்நாடு Written by

“அரசியல் சட்ட சாசனத்தை அழித்தொழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் சங் பரிவார் செய்து கொண்டு வருகிறது"

‘மேற்குத் தொடர்ச்சி மலை' என்ற ஒரேயொரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் இயக்குநர் லெனின் பாரதி. இரண்டாவது பட வேலைகள், மதுரையில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் எழுத்தாளேர் சு.வெங்கடேசன் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம் என கள செயல்பாடுகளில் பிஸியாக இருந்த மனிதரை சந்தித்தோம். 

“ஒரு தனி நபராக இடதுசாரி சித்தாந்தத்தில் ஈடுபாடுடையவர் நீங்கள். அப்படிப் பார்த்தால் பாஜக, காங்கிரஸ் என இரு தரப்பும் உங்கள் கொள்கை எதிரிகளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், பாஜக-வுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது ஏன்” என்று கேட்டதற்கு, 

“இந்திய தேர்தல் என்பதும், இங்கு நமக்கிருக்கும் ஜனநாயகம் என்பதும் ஒரு சிறய விழுக்காடு சுதந்திரம்தான். காங்கிரஸ் மீது நாம் குற்றச்சாட்டுகளை அடுக்க முடியும் என்றாலும், குறைந்தபட்ச ஜனநாயக சுதந்திரத்தைக் கூடத் தரக் கூடாது என்பதில் சங் பரிவார அமைப்புகள் முனைப்பாக இருக்கின்றன” என்று ஆரம்பித்தார்.

“நமக்கு மோடி மீது எந்த வெறுப்பும் இல்லை. அவர் மீது தனி நபர் விமர்சனமும் இல்லை. அவர் ஏற்றிருக்கும் சனாதனக் கொள்கைதான் நமக்கு எதிரி. அதைத்தான் நாம் வேரறுக்க வேண்டும். அந்த மையப் புள்ளியில்தான், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். நமக்கு கிடைத்து வரும் கொஞ்ச நஞ்ச உரிமைகளும் பாஜக ஆட்சிக்கு வந்தால் முற்றிலும் பறிக்கப்படும். அதில் எந்த சந்தேகங்களும் வேண்டாம்” என்று விளக்கினார். 

Advertisement

அவரிடம் தொடர்ந்து, “தமிழகத்திலும் சரி இந்திய அளவிலும் சரி, தங்களை முற்போக்கு சக்திகள் என்று முன்னிருத்திக் கொள்ளும் அமைப்புகளும் கட்சிகளும் ஓரணியில் திரள்வதே இல்லை. மறுபுறம் அடிப்படைவாத அமைப்புகள் ஒன்றாக நிற்கின்றன. சூழல் இப்படியிருந்தால், எப்படி முற்போக்கு சக்திகள் வெற்றி பெறும்” என்றோம்.

“இங்கு பண்பாட்டு அரசியல் என்பது மிக முக்கியமானது. மக்களிடத்தில் பண்பாட்டு ரீதியாக களப் பணிகள் செய்ய வேண்டும். தொடர்ந்து அவர்களிடம் அரசியல் பேச வேண்டும். அவர்களை அரசியலுக்குப் பழக்க வேண்டும். மக்கள் அரசியல் பழகினால் என்னாலும் அடிப்படைவாத அமைப்புகள் கோலோச்சாது. மக்கள் அரசியல் விழிப்புணர்வற்று கிடப்பதே அடிப்படைவாத அமைப்புகளுக்கு சாதகமாக அமைகிறது. எல்லோரும் ஒன்றாக நின்று அடிப்படைவாத அமைப்புகளை துரத்தியடிக்க வேண்டிய நேரமிது” என்றார் தீர்க்கமாக.

“அரசியல் சட்ட சாசனத்தை அழித்தொழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் சங் பரிவார் செய்து கொண்டு வருகிறது. வெறுப்பு அரசியல், சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல், கருத்து சுதந்திரம் என்பதை முற்றிலும் ஒழித்துக் கட்டுவது என எல்லா தளங்களிலும் சங் பரிவாரின் அங்கமான பாஜக பேரழிவை செய்து வருகிறது. 

Advertisement

இந்தியாவை ஒரே வகைக்குள், அவர்களுக்குப் பிடித்த வகைக்குள் கொண்டு வர வேலை பார்க்கிறார்கள். இந்தியா என்பது பல கலாசாரங்களை, பல சமூகங்களை, பலதரப்பட்ட மக்களை கொண்ட ஒரு ஒன்றியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாமறிந்த இந்த அரசியல் சட்ட சாசனம் என்பது இல்லாமலேயே போகும் வாய்ப்புண்டு. சனாதனம்தான் அவர்கள் ஆட்சியில் நமக்கான சட்டமாக இருக்கும்” என்று கூறினார் இறுதியாக. 

Advertisement