Udhagamandalam: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் வசிப்பவர் ராயின். இவர், தனது வேலையை முடித்து வீட்டுக்கு நேற்று மதியம் வீட்டுக்குத் திரும்பினார்.
ராயினின் மகன் நவ்ஷாத், வீட்டுக் கதவை திறந்தபோது, உள்ளே கட்டில் மீது சிறுத்தை ஒன்று படுத்திருந்தது. அதிர்ச்சியில் உறைந்தவர்கள் சமயோசிதமாக கதவை மீண்டும் வெளிப்பக்கமாக பூட்டி விட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சிறிது நேரத்தில் வனத்துறையினர் வந்து பார்த்தபோது, சிறுத்தை கட்டிலுக்கு அடியில் படுத்திருந்தது.
வனத் துறையினர் கூறும்போது, இந்த சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம். அதனால், இந்த வீட்டின் சுவரிலிருந்த சிறிய விரிசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்துள்ளது.
வீட்டில் யாரும் இல்லாததால், அங்கேயே தங்கியுள்ளது' என்றனர். சிறுத்தையைப் பிடிக்க வீட்டின் கதவு பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். 6 மணி நேர காத்திருப்புக்குப் பின், வெளியே வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. பின்னர் சிறுத்தை லாரியில் ஏற்றப்பட்டு, முதுமலை வனத்தில் விடுவிக்கப்பட்டது..