பின்னர் அந்த சிறுத்தை குட்டியை வனவிலங்கு அதிகாரிகள் விலங்கியல் பூங்காவிற்கு எடுத்துச்சென்றனர்.
Chennai: துணியால் போர்த்தப்பட்ட சிறுத்தை குட்டி ஒன்றுக்கு பாட்டிலில் பாலூட்டப்பட்டது. இது போன்ற சம்பவம் வனவிலங்கு பூங்காவில் நடைபெறுவதாக நாம் நினைத்து பார்க்கலாம், ஆனால் இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
பயணி ஒருவர் தாய்லாந்தில் இருந்து சிறுத்தை குட்டியை தனது உடமைகளில் வைத்து கடத்தி வர முயற்சி செய்துள்ளார். ஆனால், விமான நிலையத்தில் அதிகாரிகளின் சோதனையின் போது கையும் களவுமாக சிக்கிய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவர் சென்னையை சேர்ந்த காஜா மொய்தீன் என்பது தெரியவந்துள்ளது. விமான நிலையத்தில் உடமைகள் சோதனையில் போது காஜா மொய்தீன் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வேகமாக செல்ல முயன்றுள்ளார்.
மேலும் படிக்க: ‘சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக் கூடாது!'- உயர் நீதிமன்றத்தில் மனு
இதில் பலத்த சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அவரது உடமைகளில் இருந்து ஏதோ சத்தம் எழுந்துள்ளது. இதையடுத்து, அவரது பைகளை சோதனை மேற்கொண்ட போது அதில் சிறிய சிறுத்தை குட்டி இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தாய் ஏர்வேஸில் வந்த அவர் சிறுத்தை குட்டியை ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. ஆனால், அவரிடம் சிறுத்தை குட்டியை பெறுவதற்கான நபர் சென்னை விமான நிலையத்திற்கு வரவில்லை என அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பசியில் இருந்த சிறுத்தை குட்டிக்கு விமான நிலைய அதிகாரிகள் பாலூட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், மஞ்சள் நிற கிளவுஸ் அணிந்த அதிகாரி ஒருவர் சிறுத்தை குட்டியை தனது கையில் வைத்துள்ளார். மற்றொரு அதிகாரி பாட்டிலில் அடைத்த பாலை சிறுத்தை குட்டிக்கு ஊட்டுகிறார்.
இதைத்தொடர்ந்து, பலவீனமாகத் தோன்றிய அந்த சிறுத்தை குட்டியை சென்னை விமான நிலையத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவிற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: விமானத்தில் முதன் முதலாக பயணித்த 115 முதியவர்கள்; ஓர் நெகிழ்ச்சிக் கதை!