மகராஷ்டிராவில் கிணற்றுக்குள் சிக்கிய 7வயது பெண் சிறுத்தை மீட்கப்பட்டது.
மகராஷ்டிராவில் கிணற்றுக்குள் சிக்கிய சிறுத்தையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் மற்றும் வனவிலங்குகளை காக்கும் குழுவினருக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது குறித்த வீடியோவை வனவிலங்குகளை காக்கும் குழுவினர் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர்.. இதைத்தொடர்ந்து அந்த வீடியோ ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.
வனவிலங்குகளை காக்கும் அந்த அமைப்பினர் கூறியதன் படி, மகாராஷ்டிராவின் யாதவாடி கிராமத்தில் 30 அடி ஆழ கிணற்றுக்குள் சிறுத்தை கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அந்த வீடியோவில், வனத்துரையினர் கயிற்றில் ஏணியை கட்டி கிணற்றுக்குள் இறக்கியதும், தண்ணீரில் தவித்து வந்த 7 வயது பெண் சிறுத்தை தண்ணீரில் இருந்து தாவி ஏணியில் அமர்ந்துகொண்டது. இதன்பின் மரக்கூண்டு ஒன்றை கிணற்றுக்குள் கயிறு கட்டி இறக்கினர். அப்போது மர ஏணியில் அமர்ந்திருந்த அந்த சிறுத்தை கூண்டுக்குள் தாவியது.
முகநூலில் இந்த வீடியோ வெளியாகி 20 மணி நேரத்தில் 4,000 பேரால் பார்க்கப்பட்டதுள்ளது. யூ டியூபில் 16,000 பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது சிறுத்தையை மீட்ட வனத்துறையினர் குழு மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த வீடியோவின் கீழ் பதிவிட்டுள்ள கருத்துகளில், சிறுத்தையை மீட்ட வனத்துறை மற்றும் வனவிலங்குகளை காக்கும் குழுவினருக்கு இதயம் கனிந்த நன்றிகள் என்றும் மற்றொரு பதிவில், சிறுத்தை கூண்டிற்குள் செல்வதை நம்பவே முடியவில்லை. சிறந்த பணி எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மீட்கப்பட்ட அந்த சிறுத்தை, கவனிப்புக்காக மாணிக்தோ சிறுத்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
Click for more
trending news