நெடுஞ்சாலையிலிருந்த சிறுத்தை காயமடைந்திருப்பதாக தகவல்கள் பரவின.
ஹைலைட்ஸ்
- சிறுத்தை படுத்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது
- சம்பவ இடத்துக்கு வனத் துறையினர் விரைந்துள்ளனர்
- சிறுத்தை அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது
Hyderabad: கொரோனா பரவலைத் தடுப்பதற்கு நாடு தழுவிய ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து, பல்வேறு காட்டு விலங்குகள் காலியான சாலைகள் மற்றும் பொது இடங்களில் தென்படுவது குறித்து பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ஐதராபாத் நகரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சிறுத்தையும், புணுகுப் பூனையும் தென்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.
ஐதராபாத்தின் கோல்கோண்டோ பகுதியில் உள்ள நூரானி மசூதியில் புணுகுப் பூனை சுதந்திரமாக சுற்றித் திரிந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை-7ல் சிறுத்தை ஒன்று ஹாயாக படுத்திருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது.
நெடுஞ்சாலையிலிருந்த சிறுத்தை காயமடைந்திருப்பதாக தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு நகரத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவின் மீட்புப் படையினர் வனத் துறையினருடன் விரைந்துள்ளனர்.
இது குறித்து டிசிபி பிரகாஷ் ரெட்டி, “காலை 8:15 மணி அளவில் உள்ளூர் வாசிகள் சிறுத்தையை என்எச்-7ல் பார்த்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வனத் துறையினர் விரைந்தபோது, பக்கத்தில் இருந்த இடத்துக்கு சிறுத்தை தப்பித்துச் சென்றுவிட்டது. தொடர்ந்து சிறுத்தையைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது,” என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவி ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதில் இருந்து பெரும்பான்மையான மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தே வருகிறது.