This Article is From Jul 25, 2020

“பெண்கள் மீதான வன்முறைகள் இயற்கைக்கு எதிரானவை!”: அருள்மொழி #LetsTalkSeries

பெண்ணின் உரிமையாளராக ஆண் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும்போது பெண் சுய சிந்தனையோடு செயல்பட தொடங்கினால் தாக்குதலுக்கு ஆளாகத் தொடங்குகிறாள்.

“பெண்கள் மீதான வன்முறைகள் இயற்கைக்கு எதிரானவை!”: அருள்மொழி #LetsTalkSeries

ஹைலைட்ஸ்

  • பெண்கள் மீதான வன்கொடுமைகளை ஒரே நேர்கோட்டில் நாம் பார்க்கக்கூடாது
  • இந்த பிரச்னைகள் என்பது அடிப்படையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையல்ல
  • சமத்துவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது வன்முறைச் சம்பவங்கள் குறையும்

கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் குறித்து பெண்ணியலாளர்களும் அரசியல் பிரமுகர்களும் தங்களுடைய கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திராவிட இயக்க தோழர் அருள்மொழி நம்மிடையே உரையாடியதிலிருந்து...

மாறி வரக்கூடிய அரசியல் சூழல் பெண்கள் மீது எவ்வித தாக்கங்களை ஏற்படுத்துகிறது?

 சமீபத்திய கடந்த இரண்டு ஆண்டுகளில் மத மற்றும் சாதியவாத சக்திகளின் பிரச்சாரங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. சமீபங்களில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளோடு இதனைப் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. ஒரே நேர்கோட்டில் பெண்கள் மீதான வன்கொடுமை என அனைத்து சம்பவங்களையும் நாம் பார்க்கக்கூடாது. இந்த ஊரடங்கு காலங்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் ஒருபுறமும், பெண் குழந்தைகள் மீது அரங்கேற்றப்படும் பாலியல் வன்கொடுமைகள் மறுபுறமும், சாதி ஆணவ படுகொலையில் பலியாகும் பெண்கள் என மற்றொருபுறமும் இருக்கிறார்கள்.

இந்த பிரச்னைகள் என்பது அடிப்படையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையல்ல. இது ஒரு சமூக பிரச்னை. ஆண் பெண் சமத்துவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது இம்மாதிரியான வன்முறைச் சம்பவங்கள் குறையும். இந்த சமத்துவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளப் பகுத்தறிவு சிந்தனைகள் மிகவும் அவசியமாகும்.

மேற்குறிப்பிட்டதைப்போல் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பரப்பப்பட்டு வரும் மத மற்றும் சாதிய பெருமைகள், மனிதனின் சக பாலினமான பெண்களை மண்ணுடன் பொருத்திப் பேசும் மனப்பான்மையை வளர்த்திருக்கிறது. “மண்ணும் பொண்ணும் ஒன்னு” என்கிற வாசகங்கள் இதன் வெளிப்பாடே. மண்ணை போல பெண்ணும் ஒரு சொத்தாகவே பாவிக்கப்படுகிறாள். இந்நிலையில் பெண்கள், “நானும் சுய அறிவுள்ள ஒரு மனித பிறவிதான்.” என தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும்போது, இரு முரண்கள் மோதத் தொடங்குகின்றன. பெண்ணை சொத்தாகவும், அதன் உரிமையாளராக ஆண் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும்போதும், அதை எதிர்த்து பெண் சுய சிந்தனையோடு செயல்பட தொடங்கினால் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது.

யதார்த்தத்தில் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இயற்கைக்கு எதிரானது. இந்த தத்துவம்தான் பெண்கள் தாங்கள் என்ன படிக்க வேண்டும், யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும், அல்லது யாரை மறுக்க வேண்டும் போன்ற உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடாவிட்டாலும் கூட குடும்பச் சூழலிலேயே இதற்கான போராட்டத்தினை முன்னெடுக்க வித்திடுகிறது.

இன்றைய சூழல் என்பது பெண்களை நுகர்வு பொருளாகப் பாவிக்கும் தன்மையாக மாறியுள்ளது. இந்த சிந்தனை போக்கு மாற்றப்பட வேண்டுமெனில் ஆண்களை நெறிப்படுத்த வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு. இவையெல்லாம்தான் பெண்கள் மீதான வன்முறையைக் குறைக்க வழிவகுக்கும்.

போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் எத்தனை வேண்டுமானாலும் ஏட்டளவில் நாம் உருவாக்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால், அவற்றை அமல்படுத்தக்கூடிய பொறுப்பு நீதித்துறை மற்றும் காவல்துறையிடம் உள்ளது. வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் காவல் நிலையத்தை அணுகும் போது, பாதிக்கப்பட்ட பெண் உயர் சாதி சமூகத்தினராக இருந்தால் நிலைமை வேறு. பட்டியல் சாதியினரைச் சேர்ந்த பெண்களாக இருந்தால், காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்வதற்கே பெரும் போராட்டத்தினை நடத்த வேண்டியுள்ளது. இப்படியான நிலையில் கடுமையான சட்டங்கள் எந்த விதத்தில் பயன் தந்துவிட முடியும்?

.