சம்பந்தப்பட்ட தொழிற்சாலையிலிருந்து இந்த ரசாயன வாயு மூன்று கி.மீ சுற்றளவில் வசித்த மக்களைப் பாதித்திருக்கின்றது.
New Delhi: விசாகப்பட்டினம் எல்ஜி செம் நிறுவனத்தின் ரசாயன ஆலையிலிருந்து வெளியான ரசாயன நச்சு வாயுவால் மக்கள் இறந்ததாலும், அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டதாலும் மனித உரிமை ஆணையம் இன்று ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன.
இந்த நச்சு ரசாயனத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு உரிமைகள் முற்றிலுமாக மீறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடிய நிலையில், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த நிலையில் இவ்வாறான மோசமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் அதிகாலை வேளையில் எல்ஜி செம் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையிலிருந்து வெளியேறிய ஸ்டைரீன் ரசாயன வாயு தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஊடக அறிக்கைகள் வாயிலாக தாங்கள் தெரிந்துகொண்டதாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட தொழிற்சாலையிலிருந்து இந்த ரசாயன வாயு மூன்று கி.மீ சுற்றளவில் வசித்த மக்களைப் பாதித்திருக்கின்றது. பலர் சாலைகளிலேயே மயங்கிக் கிடப்பதைப் பல வீடியோக்களில் காணமுடிகிறது. மேலும் பலர் சுவாச கோளாற்றால் பாதிக்கப்பட்டவர்களாகவும், தோல்களில் தடிப்புக்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு வழங்கியுள்ள சிகிச்சை மற்றும் நிவாரணங்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மறு வாழ்வு குறித்தும், பாதிப்பின் போது போது மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கை கோரி ஆந்திர மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது.
மேலும், ரசாயன தொழிற்சாலைகளுக்கான விதிகளை பின்பற்றித்தான் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை இயங்குகிறதா என்பதை ஆய்வு செய்து சமர்ப்பிக்குமாறு கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தினை மனித உரிமை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து அதிகாரிகளிடமிருந்தும் பதில்கள் கொடுக்க நான்கு வாரங்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது மனித உரிமை ஆணையம்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குத் தமிழக முதல்வர் பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.