பிரின்ஸ் சாந்த குமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஓட்டல் நிறுவனர் ராஜகோபாலின் உடல் கவலைக்கிடமாக உள்ளது. அவரை தனியார் மருத்துவனையில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டும், ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதால் அது சீராகும் வரையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து ராஜகோபால் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் படுத்த படுக்கையாக தனியார் மருத்துவமனை ஆம்புலன்சில் வந்து ராஜகோபால் சரண் அடைந்தார்.
அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் புழல் சிறைக்கு செல்லும் வழியில் ராஜகோபாலின் உடல்நிலை மேலும் பாதிப்பு அடைந்தது.
இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அங்கு போதிய வசதிகள் இல்லையென்று கூறி அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்தனர்.
இந்த நிலையில் ஸ்டான்லியில் சிகிச்சை பெற்று வரும் ராஜகோபாலுக்கு உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதால் அது சீரடையும் வரையில் அவர் அங்குதான் இருப்பார் என்று கூறப்படுகிறது.