ஹைலைட்ஸ்
- கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிந்தது
- கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இந்தப் போர் தீவிரமாக நடந்தது
- போர் பாதித்த இடங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை
இலங்கை அரசுக்கும் தமிழீழப் புலிகளுக்குமான உள்நாட்டுப் போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகப் போகின்றன. போரில் கொல்லப்பட்ட பல்லாயிரம் பேருக்கான நீதியும், போரால் பாதிப்படைந்து தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கான உரிமையும் கண்ணுக்கெட்டும் தூரம் வரையில் புலப்படவில்லை. இந்தப் போர் காரணமாக பாதித்த முன்னாள் தமிழீழப் புலிகள் படையின் வீராங்கனைகளின் வாழ்க்கையின் அடிப்படை சாரம்சமே ஆட்டம் கண்டுள்ளது.
ஒரு காலத்தில் ஆண்களுக்கு இணையாக போர்களத்தில் நின்று களமாடிய பலர் தற்போது கல்யாணம் செய்து வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர். ஆனால், தொடங்கியது முதல் தேக்கமடைந்த நிலையில்தான் ஒவ்வொருவரின் கதையும் உள்ளது.
பெண்கள் மட்டுமே குழுவாக செயல்பட்ட புலிகளின் மாலதி பிரிகேட்டில் இருந்தப் பெண், போர் முடிந்த பின்னர் இலங்கை அரசால் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பப்பட்டார். துப்பாக்கியை மட்டுமே தூக்கிய கையில் தையல் மெஷினை திணித்தனர். அது சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து, சொந்தமாக கோழிப் பண்ணை வைத்துள்ளார். அதிலும் தோல்விதான். தற்போது தனது அன்றாட செலவுக்கே வீட்டை எதிர்பார்த்துள்ளார் 35 வயதாகும் அந்த முன்னாள் புலி. `என் குடும்பத்துக்கு சுமையாக இருக்க நான் விரும்பவில்லை. ஒவ்வொரு முறையும் பணம் தேவைப்படும் போது என் தந்தையை எதிர்பார்க்க முடியாது. எனக்கு இதைப் போன்ற வாழ்க்கை வேண்டவே வேண்டாம். நான் மட்டும் இன்னும் புலிகள் அமைப்பில் இருந்திருந்தால், கண்டிப்பாக கமாண்டர் பதவிக்கு உயர்வு பெற்றிருப்பேன்' என்று ஆதங்கப்படுகிறார். பெயர் குறிப்பிட விரும்பாத இந்த முன்னாள் புலி, தனது பதின் வயதில் புலிகள் அமைப்பில் சேர்ந்துள்ளார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இலங்கை அரசுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த தமிழீழப் புலிகளின் முடிவு, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் ரத்தத்தால் முடித்து வைக்கப்பட்டது. 9 ஆண்டுகள் கடந்த நிலையில், இலங்கையின் வடக்குப் பகுதியில் சிதறடிக்கப்பட்ட நிலபரப்பை இன்னும் ஒட்ட முடியாமல் தவித்து வருகின்றனர் மக்கள்.
தமிழர்களுக்கு தனி நாடு, பெண்களுக்கு சம உரிமை என்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் புலிகள் அமைப்பில் ஏராளமான பெண்கள் இணைக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் புலிகள் அமைப்பில், மூன்றில் ஒரு போர் வீரர் பெண்ணாக இருக்கம் அளவுக்கு எண்ணிக்கை உயர்ந்தது.
போரில் இருந்த வரை ஆண்களுக்கு நிகரான அனைத்து உரிமைகளையும் அனுபவித்த வந்த பெண்களின் நிலைமை, போர் முடிந்த பிறகு தலைகீழாக மாறியது. கல்யாணம் செய்து கொள்ளவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் சமூகமும் குடும்பமும் அவர்களைப் பணித்தது.
12 வயதில் தமழீழப் புலிகள் அமைப்பின் கடற்படையில் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத வீராங்கனை, `உண்மையில் எங்களுக்குச் செய்வதற்கு இப்போது ஒன்றுமே இல்லை. பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி கற்றுத் தர வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால், என் கணவர் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார். என்னை இலங்கை அரசு அடையாளம் கண்டுவிடும் என்று அவர் அஞ்சுகிறார்' என்றார் வருத்தத்துடன். 39 வயதாகும் இந்த கடல் புலிக்கு, உடம்பில் பல்வேறு இடங்களில் போரின் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இன்னும் மறையாமல் இருக்கின்றன. புலிகள் அமைப்பின் பல பெண்களைப் போல இவர் புனர்வாழ்வு மையத்தில் சிக்கவில்லை. அங்கு அனுப்பப்படும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
போரில் உயிர் பிழைத்த பெண்களின் பெரும்பான்மையானோருக்குத் தங்களின் நிதித் தேவையை கவனித்துக் கொள்ள முடியாத நிலையே இன்னும் இருக்கிறது.
இந்த வெகுநாள் பிரச்னை குறித்து சர்வதேச க்ரிசிஸ் குழுவின் ஆலன் கீனன், `போரில் சண்டையிட்ட ஆண்களை விட பெண்களுக்கு வாழ்வில் முன்னேறி வருவது கூடுதல் சிரமம். பெண்களைத் தான் அதிக வறுமை பீடிக்கின்றது. பாலியல் தொந்தரவுகளும் அவர்களுக்குத் தான் அதிகம். இதை சரி செய்ய அரசிடம் ஒரு உறுப்படியான திட்டம் கூட இல்லை. இன்னும் சொல்லப் போனால், இலங்கையில் இருக்கும் தமிழ் சமூகமே இவர்களை பல்வேறு காரணங்களுக்காக தனிமைபடுத்துகிறது' என்றார் வேதனையுடன்.
தமிழீழப் புலிகளின் வீழ்ச்சி என்பது அந்த அமைப்பில் இருந்த வீராங்கனைகளுக்கு, பெண்ணியம் தோற்றதற்கான ஒரு குறியீடாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் ட்ரௌசர் போட்டுக் கொண்டு இலங்கை ராணுவத்தை எதிர்கொண்டவர்கள் தற்போது குடும்பத்துக்காகவும் சமூகத்துக்காகவும் புடைவை உடுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண பெண்கள் நல அமைச்சர் ஆனந்தி சசிதரன், போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்து வருகிறார். `போரில் காயமடைந்த பெண்கள் தங்கள் மீதுள்ள காயங்களை யாருக்கும் காட்டக் கூடாது என்பதற்காக, அதை மறைக்கும் வகையில் ஆடை உடுத்துவர். இதன் காரணமாக அவர்களால் அதிக உடல் உழைப்பு கொடுக்கும் வேலைகளை செய்ய முடியாது' என்று முன்னாள் வீராங்கனைகள் பிரச்னையின் மற்றொரு பரிமாணத்தைப் பற்றி விளக்குகிறார்.
இலங்கையின் வடக்குப் பகுதி தான் உள்நாட்டுப் போராலும், போரின் இறுதிக் கட்டத்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டவை. இந்த இடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள இலங்கை அரசு பெரும் நிதியை செலவிட்டு வருகிறது. ஆனால், இந்த நிதி ஏழைகளுக்கும் வேண்டியவர்களுக்கும் போய்ச் சேரவில்லை என்பது தான் குறையாக இருக்கிறது. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 80 மில்லியன் டாலரை மறுவாழ்வுக்காக ஒதுக்கியது இலங்கை அரசு. இந்நிலையில் அந்நாட்டு நிதி அமைச்சர் மங்கல சமரவீரா, `போரில் வெற்றி பெற்ற பிறகும் அமைதி இன்னும் கிட்டவில்லை. அமைதியை மீட்டெடுக்க போரில் பாதிக்கப்பட்டவர்களின் இதயத்தை நாம் வெற்றி பெற்றாக வேண்டும்' என்றார்.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)