மத்திய அமைச்சர் பிரகாஷ் விருது அறிவிப்பை வெளியிட்டார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கோவாவில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இந்தாண்டு நவம்பர் 20-ம்தேதி தொடங்கி 28-ம்தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது. அதில் வைத்து ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று பிரான்ஸ் நடிகர் இஸ்பெல் ஹப்பெர்ட்டுக்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட உள்ளது.
இந்தாண்டு நடைபெறும் விழா என்பது 50-வது சர்வதேச விழா ஆகும். இதனை முன்னிட்டு பெண்கள் பங்களிப்பு செய்த 50 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச திரைப்படவிழாவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அமிதாப் பச்சனின் சுமார் 8 படங்கள் திரையிடப்பட உள்ளது.