கஜா புயலை அடுத்து ஒரு வாரத்துக்கும் மேல் பெய்த மழை, கடந்த சில நாட்களாக ஓய்ந்துள்ளது. இந்நிலையில், நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ‘நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிகவும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அது இன்று சற்று மாறும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
அதே நேரத்தில் நாளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய நிறைய வாய்ப்புள்ளது. அதேபோல தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. இந்த மழை அடுத்த 2 அல்லது 3 நாட்கள் வரை தொடரக்கூடும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.