This Article is From Jun 05, 2020

மங்காத்தா சூதாட்டம் போல், மின்கட்டண வசூலில் கெடுபிடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்!

வீட்டுக்குப் பயன்படுத்தும் மின் கட்டணம் என்ற பாறாங்கல்லைத் தலையில் தூக்கி வைத்து- அடித்தட்டு, ஏழை எளிய, நடுத்தர மக்களை அடியோடு நசுக்கிக் கூத்தாடும் அதிமுக அரசின் இந்த போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

மங்காத்தா சூதாட்டம் போல், மின்கட்டண வசூலில் கெடுபிடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மங்காத்தா சூதாட்டம் போல், மின்கட்டண வசூலில் கெடுபிடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஹைலைட்ஸ்

  • மங்காத்தா சூதாட்டம் போல், மின்கட்டண வசூலில் கெடுபிடி
  • வீதப்பட்டியல் அடிப்படையில் புதிய மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது
  • கொரோனா துயரத்தில் மூழ்கியிருக்கும் மக்களுக்கு, ஷாக் ஏற்படுத்தியிருக்கிறது

கொரோனா காலத்தில் மக்களிடம் மங்காத்தா சூதாட்டம் போல், மின்கட்டண வசூலில் ஈடுபட்டு கெடுபிடி செய்வதும் பொறுத்துக் கொள்ள முடியாததாகும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு மின் கட்டணத் தொகை வசூலிக்கப்படுவது, தங்களிடம் நடத்தப்படும் பகல் கொள்ளையாக மின் நுகர்வோர் அதிர்ச்சியடைந்து கொந்தளிப்பது, அதிமுக அரசின் காதுகளில் விழாமல் இருப்பது கொடுமையாக இருக்கிறது.

கொரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் மின் நுகர்வோர் செலுத்திய கட்டணத்தை (பி.எம்.சி) மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று அதிமுக அரசு அறிவித்தது. அதை அப்படியே நம்பிய அப்பாவிப் பொதுமக்களுக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றமாகி - அதுவும்  அதிமுக அரசின்  110 அறிவிப்புகள் போல் மாறி, கொரோனா துயரத்தில் மூழ்கியிருக்கும் மக்களுக்கு, ஷாக் ஏற்படுத்தியிருக்கிறது.

முந்தைய மாதக் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிப்பு வெளியான போதே, அடுத்து வருகின்ற மாதக் கணக்கெடுப்பில் இந்த பி.எம்.சி கட்டணம் சரி செய்யப்படும் என்று உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால் இப்போது மின் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட முறையில் உத்தரவாதம் தரப்பட்டபடி மின்கட்டணம் வசூல் செய்யாமல்- குறிப்பாக யூனிட்டை கழிக்காமல் வெவ்வேறான  வீதப்பட்டியல் அடிப்படையில் புதிய மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பு மின் நுகர்வோர்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு - பதற்றத்தினால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்காமல், கட்டணம்  வசூலிப்பதுதான்  இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்பது நன்கு தெரிந்திருந்தும்,  தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என்பது போல், மின் பகிர்மானக் கழகம் விந்தையான விளக்கமளிப்பதும் - அதை அ.தி.மு.க. அரசு ஆமோதித்து கொரோனா காலத்தில் - மக்களிடம் மங்காத்தா சூதாட்டம் போல், மின்கட்டண வசூலில் ஈடுபட்டு கெடுபிடி செய்வதும் பொறுத்துக் கொள்ள முடியாததாகும்.

மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்குப் பதில், ஊரடங்கில் வருமானத்தை இழந்து, வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்துவிட்டுப் பரிதவிக்கும் அவர்களுக்கு, வீட்டுக்குப் பயன்படுத்தும் மின் கட்டணம் என்ற பாறாங்கல்லைத் தலையில் தூக்கி வைத்து- அடித்தட்டு, ஏழை எளிய, நடுத்தர மக்களை அடியோடு நசுக்கிக் கூத்தாடும் அதிமுக அரசின் இந்த போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே, முந்தைய மாதம் மின் நுகர்வோர் செலுத்திய கட்டணம் மொத்த யூனிட்டை இரண்டு மாத நுகர்வாகப் பிரிப்பது வீதப் பட்டியல் மாற்றத்தால் ஏற்படும் அதிக கட்டணம் உள்ளிட்டவற்றில், வேண்டுமென்றே உருவாக்கி  இருக்கும் குழப்பங்களுக்கு உடனடியாகத்  தீர்வு காண வேண்டும் என்றும், பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் உரிய முறையில், யூனிட்டுகளையும் கழித்து மின் கட்டணம் வசூல் செய்வதை அதிமுக அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

.