This Article is From Aug 08, 2018

'கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்பட வேண்டும்!'- ராகுல் காந்தி கருத்து

60 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரத்தன்மையுடன் பயணித்த திமுக தலைவரும் 5 முறை முதல்வருமான கருணாநிதி இன்று அகால மரணமடைந்தார்

'கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்பட வேண்டும்!'- ராகுல் காந்தி கருத்து

தமிழக அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரத்தன்மையுடன் பயணித்த திமுக தலைவரும் 5 முறை முதல்வருமான கருணாநிதி இன்று அகால மரணமடைந்தார். கடந்த ஜூலை 28 ஆம் தேதி அவர், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்ப்பட்டதன் காரணமாக அவருக்கு கடுமையான ஜுரம் வந்தது. தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் இன்று மாலை 6:10 மணிக்கு கருணாநிதி காலமானார். இந்நிலையில் அவரது உடலை மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய திமுக-வின் செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வருக்கு நேரில் சென்று கோரிக்கை வைத்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக ஒரு அவசர வழக்கை திமுக, தொடுத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வது குறித்து ராகுல் காந்தி, ‘ஜெயலலிதாவைப் போல கலைஞரும் தமிழக மக்களின் குரலாகவே இருந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் இடம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் இந்த நேரத்தில் அதற்கு தகுந்தாற் போல நடந்து கொள்வர் என நம்புகிறேன்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதி இறந்த பிறகு ராகுல், ‘கலைஞர் கருணாநிதி 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக அரசியலில் கம்பீரமாக வலம் வந்தவர். தமிழர்களால் விரும்பப்பட்டவர். அவரது மறைவால் இந்தியா அதன் ஒப்பற்ற பிள்ளையை இழந்துள்ளது. அவரது குடும்பத்தாருக்கும், அவரது பிரிவால் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று பதிவிட்டிருந்தார்.

 

.