மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25,000 கட்டணம் - அதிமுக அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு வரும் 15, 16-ம் தேதிகளில் விநியோகம் செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறலாம் என்றும் இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
15.11.2019 மற்றும் 16.11.2019 ஆகிய இரண்டு நாட்களில், உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்'' என்று தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பதவிக்கும் உரிய விருப்ப மனுவுக்கான கட்டணத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25,000 கட்டணம், வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5,000 விருப்ப மனு கட்டணம். நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10,000 கட்டணம்.
நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500 கட்டணம், பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5,000 கட்டணம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ1,500 கட்டணம், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.5,000 கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.