This Article is From Dec 27, 2019

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: மக்கள் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement
தமிழ்நாடு Edited by

மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 

தமிழகத்தில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் 4 பதவியிடங்களுக்கு 4 வகையான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்ய வெள்ளை நிற வாக்குச்சீட்டுகள், கிராம ஊராட்சி தலைவரை தேர்வு செய்ய இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்ய மஞ்சள் நிற வாக்குச்சீட்டுகள், ஒன்றிய கவுன்சிலரை தேர்வு செய்ய பச்சை நிற வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகிறது.

Advertisement

வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மேற்பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 63 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

மேலும் அந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவு முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement