உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 பணம் வழங்க அனுமதி
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க தடை: விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது.
இதைத் தொடர்ந்து வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்காததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி வழங்கியது. மேலும், வார்டு வரையறைகளை முடித்த பின் 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரொக்கப்பணம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 26ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில், வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால், உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகே 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றாலும், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 வழங்க தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கூறினார்.
இதைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 பணம் வழங்குவதை தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 பணம் வழங்க அனுமதியளித்துள்ளது. மேலும், தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.