திமுக என்றும் எந்த தேர்தலை கண்டும் பயப்படுபவர்கள் அல்ல - துரைமுருகன்
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை மட்டும் அறிவித்து விட்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை அறிவிக்காதது ஒரு அயோக்கியத்தனமான அறிவிப்பு என திமுகவின் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதுதொடர்பான வழக்கை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. இதனை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதன்படி கிராமப்புற ஊராட்சித் தேர்தலுக்கான தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13ம் தேதியாகும், தொடர்ந்து, வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் டிசம்பர் 18ம் தேதியாகும்.
இதையடுத்து, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறுகிறது. இதன் பின்னர் தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதாவது, 'மாநிலத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புற ஊராட்சி அனைத்துக்கும் ஒன்றாகத்தான் இதுவரை தேர்தல் நடந்துள்ளது. முதல்முறையாக கிராமப்பஞ்சாயத்துக்கள் வரை நடத்திவிட்டு மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிறகு நடத்துவோம் என்று கூறுவது இந்த ஆட்சியின் கையாலாகாத தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இதையடுத்து மாவட்டங்களை பிரித்துள்ளனர். ஆனால் அதில் பல சங்கடங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட பஞ்சாயத்து இருக்கிறது. அப்படியானால் வேலூர் மாவட்டத்தை 3ஆக பிரித்தால், பஞ்சாயத்து 3ஆக இருக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளும் இதுவரை செய்யவில்லை.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அதிமுக அரசு தேர்தல் நடத்தமாட்டார்கள். காரணம், நல்ல வருமானம் அதில் தான். இந்த விவகாரம் தொடர்பாக யாரேனும் வழக்கு பதிவு செய்து தேர்தலை நிறுத்திவிடமாட்டார்களா? என அதிமுக அரசு எண்ணுகிறது.
இதற்கு எதிர்க்கட்சிகள் மீது பழி போடலாம் என எதிர்ப்பது கொண்டிருக்கின்றனர். மேலும், திமுக என்றும் எந்த தேர்தலை கண்டும் பயப்படுபவர்கள் அல்ல. இப்போதும் நாங்கள் ரெடி என்று அவர் கூறினார்.