வாக்குகள் 2020 ஜனவரி 2-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய 2 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து 6-ம்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது.
இந்நிலையில் வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்காததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகள் எதுவும் முடிக்கப்படாமல் உள்ளது. இதுபோன்ற சூழலில் தான் தற்போது மாநிலம் முழுவதும் 9 புதிய மாவட்டங்கள் துவங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அங்கும் அவசர கதியில் தான் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்போது உள்ள நிலையில் வாக்களர்களுக்கு தாங்கள் எந்த தொகுதியில் இருக்கிறோம் என்பது கூட தெரியவில்லை. இது அவர்களது வாக்கு சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும் என திமுக தரப்பு தெரிவித்தது.
தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மாநிலத்தில் வார்டு மறுவரையறை அனைத்தும் முடிந்த பின்னர் தான் அதிகாரப்பூர்வமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் தேர்தல் நடைமுறை என்பது அமலுக்கு வந்த பின்னர் அதற்கு தடை விதிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாது. இதில் மனுதாரர் தரப்பில் கூறுவது போன்று புதிய மாவட்டங்கள் தான் பிரச்னை என்றால் அதற்கு மட்டும் தேர்தலை நிறுத்தி வையுங்கள். ஒட்டு மொத்தமாக தடை விதிக்க வேண்டாம் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதிய வார்டு மறுவரையறை செய்யப்படுவதற்கு முன்னதாக தேர்தலை ஏன் அறிவித்தீர்கள். சட்டத்தை நாம் அனைவரும் பார்க்கிறோம், அதனால் அதனை மதித்து நடக்க வேண்டும்.
இதில் தேர்தலுக்கு குறிப்பிட்ட நேரம் என்பது முக்கியம் கிடையாது. ஆனால் அது முறையாக நடத்தப்பட வேண்டும். சட்ட விதிகளை குறுக்கு வழியில் பயன்படுத்துவதை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது என்று கூறியிருந்தனர். இந்த வழக்கில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து உள்ளாட்சி தேர்தல் விவரங்களை அறிவித்தார். இதன்படி, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய 2 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
உள்ளாட்சி தேர்தலுக்காக டிசம்பர் 9-ம்தேதி முதல் டிசம்பர் 16-ம்தேதி வரையில் வேட்பு மனுவை தாக்கல் செய்து கொள்ளலாம். டிசம்பர் 17-ம்தேதி வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படுகிறது. அவற்றை திரும்பப் பெற டிசம்பர் 19-ம்தேதி கடைசி நாளாகும்.
வாக்குப்பதிவு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். வாக்குகள் 2020 ஜனவரி 2-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.