தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட்.31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தப்படி காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர், இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்கள பணியாளர்களின் கடின உழைப்பால் சென்னையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.
சென்னையைப் போல் தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு செயல்படுகிறது. மருத்துவ நிபுணர்களின் கருத்து அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 31.7.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது. இருப்பினும், பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறைப்படி இ-பாஸ் பெற வேண்டும்.
தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்.
தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.