This Article is From May 26, 2020

5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை!

எனினும், பேருந்துகள் இயங்காததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூன் 1ம் தேயில் இருந்தாவது ஊரடங்கு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.

5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை!

5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை!

5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்க வேண்டுமா என்ன என்பது குறித்து தமிழக அரசு அமைத்துள்ள 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச்.24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்ததாக தற்போது வரை 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.  

தற்போது, ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்து உள்ளது. சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில், ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சலூன்கள் உட்பட அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

எனினும், பேருந்துகள் இயங்காததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூன் 1ம் தேயில் இருந்தாவது ஊரடங்கு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 11,000ஐ கடந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 549 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல்,இதுவரை இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில் 805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 17,082 ஆக உயர்ந்துள்ளது. 

இதனிடையே, கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழக அரசால் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொற்றுநோய் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் உட்பட 19 மருத்துவ நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அவர்கள் தொடர்ச்சியாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்து ஒவ்வொரு ஊரடங்கு முடியும்போதும் ஆய்வறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்கின்றனர். கடந்த முறை முதல்வருடன் ஆலோசனை நடத்தியபின் பேட்டி அளித்த அந்தக் குழுவினர் ஊரடங்கைத் தளர்த்தக்கூடாது என்று தெரிவித்ததாகக் கூறினர்.

இந்நிலையில், 4-ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, மேலும் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்து முதல்வர் இன்று மீண்டும் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளார். 

இந்தக் கூட்டத்தில் ஊரடங்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தளர்வுகள் குறித்து நடத்திய ஆய்வு, மருத்துவப் பரிசோதனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சென்னையில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று, மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு திரும்புவோரால் வரும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது, குடிசைப் பகுதிகளில் பரவும் நோய்த்தொற்று, அடுத்தகட்ட நடவடிக்கை ஆகியவை ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
 

.