தமிழகத்தில் நாளை முதல் பொது முடக்கம் முடிவடைகின்ற நிலையில் தற்போது செப்.30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையை முதல்வர் தற்போது வெளியிட்டுள்ளார்.
எவற்றிற்கெல்லாம் அனுமதி மறுப்பு;
• மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.
• தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-
• பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.
• திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
• மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
• புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து
• மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.
பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
மாநில அரசு அமல்படுத்தி வரும் கட்டுப்பாடுகள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர பரிசோதனைகள் மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் உள்ள நிலையில் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இதனால் நோய்ப்பரவலை மேலும் பரவுவதை கட்டுப்படுத்த இயலும். எனவே, பொதுமக்கள் அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.