This Article is From Apr 14, 2020

உருப்படியான நிவாரணத் திட்டம் இல்லை: ஊரடங்கு நீட்டிப்பை விளாசும் திருமா!

"30 நாட்களுக்கு 15 கிலோ என்றால் ஒரு நாளைக்கு அரை கிலோ அரிசி தான் வருகிறது"

Advertisement
தமிழ்நாடு Written by

"எவ்வித நிவாரண அறிவிப்பும் இல்லாமல் முழுஅடைப்பை நீட்டிப்பது பட்டினிச்சாவு களுக்கு வழிவகுக்கும்."

Highlights

  • தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது
  • இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது
  • தேசிய ஊரடங்கு மே3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்றுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர், ஊரடங்கு உத்தரவு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கு முன்னதாகவே நேற்று, தமிழக அரசு, மாநிலத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவு, ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவித்தது. இதில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன் வைத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

அவர், ‘ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆனால், உருப்படியான நிவாரணத் திட்டம் எதுவும் இல்லாமல் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற எண்ணம் பரவலாக மக்களிடம் நிலவி வந்தது. ஒருசில மாநிலங்கள் அதற்கான அறிவிப்பை நான்கைந்து நாட்களுக்கு முன்பாகவே செய்துவிட்ட நிலையில், தமிழக அரசு மட்டும் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்ததைப்போலக் காலம் தாழ்த்தியது விமர்சனத்துக்குள்ளானது. 

Advertisement

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை விலையில்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது மே மாதத்தில் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்பதை சூசகமாக உணர்த்தி உள்ளது. இதனை எப்படி நிவாரணம் என்று ஏற்க முடியும்? மே மாதத்துக்கும் ரேசன் பொருட்களைக் கூடுதலாக வழங்கவேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்!

வெளிமாநிலங்களிலிருந்து இங்கே வந்து தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு 30 நாட்களுக்குத்தாக சேர்த்து 15 கிலோ அரிசியும், பருப்பு எண்ணெய் தலா ஒரு கிலோவும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு 15 கிலோ என்றால் ஒரு நாளைக்கு அரை கிலோ அரிசி தான் வருகிறது. நிச்சயமாக அது அவர்களுக்குப் போதாது. பிற மாநிலங்களில் தங்கியுள்ள நம்முடைய மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அந்த அரசுகள் மிகச் சிறப்பான நிவாரணத்தை வழங்குகின்றன. எனவே வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Advertisement

குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவ்வாறு செய்தால்தான் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் இந்த முழு அடைப்பில் தாக்குப்பிடிக்க முடியும். அவர்களுக்கு எவ்வித நிவாரண அறிவிப்பும் இல்லாமல் முழு அடைப்பை நீட்டிப்பது பட்டினிச் சாவுகளுக்கு வழிவகுக்கும்.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்கும் வெளி மாநிலங்களைச்சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் போதிய நிவாரண அறிவிப்பை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வலியுறுத்துகிறோம்' என அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement