மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையானது மே 17 ம் தேதியுடன் முடிவடைகிறது
New Delhi: தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 63 ஆயிரத்தினை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையானது மே 17 ம் தேதியுடன் முடிவடைகிறது. இது முடிவுற்ற பிறகும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும், தொழில் துறை நிறுவனங்கள் அதிக அளவிலான உற்பத்தியை மையப்படுத்தி நகரக்கூடாது என்றும், முழு முடக்க நடவடிக்கை நீக்கப்பட்ட பிறகு முதல் வாரம் ஒரு சோதனை ஓட்ட காலமாக நாம் கருத வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
சமீபத்தில் விசாகப்பட்டடினத்தில் ரசாயன தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ரசாயன நச்சு வாயுவால் 1,000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டதோடு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாதிரியான சம்பவத்திற்கு வாய்ப்பளிக்காமல், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களில் கூறியுள்ளது.
பல நாட்களாக மூடப்பட்டுள்ள ரசாயன தொழிற்சாலைகளில் நிலையான இயக்க முறைகளைப் பின்பற்றாமல் இருக்கக்கூடும். இதனால் குழாய் வால்வுகளிலும், இதர பகுதிகளிலும் ரசாயனங்கள் எஞ்சி மீதமிருக்கக்கூடும். எனவே மறு தொடக்கம் செய்யும் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
40 நாட்களாக இயங்காத ரசாயன தொழிற்சாலையான எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விசாகப்பட்டின தொழிற்சாலையில் பழுதடைந்த வால்வில் ஏற்பட்ட கசிவின் காரணமாகவே ஸ்டைரீன் நச்சு வாயு வெளியேறியுள்ளதாக புலனாய்வாவார்கள் நம்புகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்கள் தொழிற்சாலைகளில் மூலப்பொருட்களை எவ்வாறு பத்திரமாக சேமித்து வைக்கப்பட வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளது.
மேலும், தொழிற்சாலைகள் மறு தொடக்கம் செய்யப்படும்போது முதல் வாரமானது சோதனை ஓட்ட வாரமாக இயங்கப்பட வேண்டும். அதிக அளவிலான உற்பத்தியை முதல் வாரத்தில் மேற்கொள்ளக்கூடாது என தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் வழிகாட்டுதல்கள் குறிப்பிட்டுள்ளன.
தொழிற்சாலைகளில் ஒவ்வொரு இரண்டு-மூன்று மணி நேரங்களுக்கு பிறகும் கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உணவு விடுதிகள் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் மறு தொடக்கம் நடைபெறும் போது, அச்சமயத்தில் ஏற்படும் விசித்திரமான ஒலிகள் அல்லது வாசனை, வெளிப்படும் கம்பிகள், அதிர்வுகள், கசிவுகள், புகை, ஒழுங்கற்ற இயக்கம் அல்லது பிற சாத்தியக்கூறுகள் ஏதேனும் தென்படுவதை தொழிலாளர்கள் உணரக்கூடிய அளவிற்கு தொழிலாளர்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
அதே போல ஊழியர்களின் உடல் வெப்பநிலையை ஒரு நாளைக்கு இரண்டு முறை சோதனை செய்ய வேண்டும். கொரோனா தொற்று பரிசோதனை உட்பட மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்த்தின் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. மேலும், வெற்றிகரமான மறு தொடக்கத்திற்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் தனிக்கை செய்வதன் அவசியத்தினையும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு குறிப்பிட்டுள்ளது.
24*7 என்கிற அளவில் இயங்கும் தொழிற்சாலைகள் 33 சதவிகித ஊழியர்களுடன் ஷிப்ட் முறையில் இயங்க வேண்டும். ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் ஒரு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். தொழில்துறை நிறுவனங்கள் தொழிலாளர்களை உரிய சுகாதார பாதுகாப்பு வசதிகளோடு தங்க வைக்க வேண்டும் என மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு வழிகாட்டியுள்ளது.
.
Guidelines for Restarting I... by NDTV on Scribd