கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா மார்ச் 25 அன்று நாடு தழுவிய பூட்டுதலை விதித்தது.
New Delhi: தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 67 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசு அறிவித்த முழு முடக்க(lockdown ) நடவடிக்கையானது இம்மாதம் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலமாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். அதனையொட்டி, மூன்றாவது முறையாக முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமல்லாமல், சிவப்பு மண்டலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்த்து இதர பகுதிகளுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிவப்பு மண்டலங்களை பொறுத்த அளவில், இரவு நேர ஊரடங்கு மற்றும் பொதுப்போக்குவரத்து தடை போன்றவை தொடர வாய்ப்புள்ளது. இந்நிலையில் கூடுதல் தளர்வுகளுக்கான பரிந்துரைகளை மே 15 தேதிக்குள் அனுப்புமாறு பிரதமர் மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, முதல் கட்டமாக முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டபோது பின்பற்றப்பட்ட கட்டுப்பாடுகள் இரண்டாம் கட்ட முழு முடக்க நடவடிக்கையின்போது தளர்த்தப்பட்டது. அதே போது தற்போது மூன்றாவது முறையாக முழு முடக்க நடவடிக்கைகள் நீட்டிக்கப்படும்போது, முன்னர் இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் இருக்கும் என பிரதமரின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் தொற்று பாதிப்பு மிக மிக குறைந்த அளவு இருக்கிறது என்றாலும், தேசிய தலைநகர் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பெரிய அளவில் பரவியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல மாநிலங்கள் முழு முடக்க நடவடிக்கையை நீட்டிக்குமாறு கோரியிருந்தன. ஆனால், சிவப்பு மண்டலங்கள் என்பதை மாவட்டம் என்கிற வரையறையிலிருந்து கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ள பகுதிகளுக்கு மட்டுமானதாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கைகள் மாநில அரசால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
தொடர்ச்சியான முடக்கம் காரணமாக கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பகுதிகள், பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள மும்முரமாக உள்ளன. தேசிய அளவில் தொற்று பரவல் குறித்த புவியியல் பரவல் அறிகுறிகளை சுகாதார அதிகாரிகள் தெரிந்து வைத்துள்ளனர் என பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், “இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு குறித்த திட்டங்களில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது நாம் இரு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். முதலாவதாக தொற்று பரவலை குறைப்பது, அடுத்ததாக பொது நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரிப்பது என இந்த இரண்டு சவால்களை சமாளிப்பதற்கு நாம் பணியாற்ற வேண்டியுள்ளது“ என பிரதமர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் பிரதமர் மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர கட்டுப்பாடுகளில் தளர்வினை அறிவித்திருந்தார். அதன் பின்னர் முழு முடக்க நடவடிக்கையானது இம்மாதம் 4 ம் தேதி துவங்கி 17 ம் தேதியுடன் முடிவடைகிறது என அறிவித்தார்.
தேசிய அளவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது சீனாவைவிட அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த எண்ணிக்கை இம்மாதம் 17 ம் தேதியில் 84 ஆயிரத்தினை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என அரசாங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.