New Delhi: இன்ஜின் இல்லாமல் இயங்கும் அதிவேக ‘ட்ரெய்ன் 18’ ரயிலின் சோதனையை, அடுத்த மாதம் நடத்த இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
இந்த ரயிலில் பெட்டிகளை இழுக்கும் லோகோமோடிவ் இன்ஜின் கிடையாது. ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் டிராக்ஷன் மோட்டார் இடம் பெற்றிருக்கும். இந்த மோட்டார் மூலம் பெட்டிகள் இயங்கும். மெட்ரோ ரயிலிலும் இதே தொழில்நுட்பம் தான் உள்ளது.
சென்னையில் இருக்கும், ஐ.சி.எஃப் ரயில் தயாரிப்பு தொழிற்சாலையில், ட்ரெய்ன் 18 உருவாக்கப்பட்டது. அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகம் செல்லும். இந்திய ரயில்வேவுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும், ஆர்.டி.எஸ்.ஓ என்ற அமைப்பு தான் இந்த ரயிலின் சோதனையை செய்ய உள்ளது.
வெற்றிகரமாக சோதனையில் இந்த ரயில் தேர்ச்சி பெற்றவுடன், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயில் தற்போது இருக்கும் சதாப்தி ரயில்களுக்கு பதில் பயன்பட இருக்கின்றன. ஐ.சி.எஃப் இது போன்ற 6 ரயில்களை உருவாக்க இருக்கிறது. அதில் இரண்டு, படுக்கை வசதி கொண்டதாக இருக்கும்.
இந்த டிரெய்ன் 18-ல் அதி நவீன தொழில் நுட்பங்கள் உள்ளன. ஒவ்வொரு பெட்டிகளும் மெட்ரோ ரயில்கள் போல இணைக்கப்பட்டிருக்கும், தானியங்கி கதவுகள், வைஃபை வசதி, ஜி.பி.எஸ் மூலம் தகவல் தரும் தொழில்நுட்பம், பையோ வேக்கம் சிஸ்டம் கொண்ட மாடுலர் கழிவறைகள், ரயில் செல்லும் திசை நோக்கி, இருக்கையை திருப்பிக் கொள்ளும் அம்சம், எல்.இ.டி விளக்குகள் ஆகியவை இந்த ரயிலுக்கு சிறப்பு சேர்க்கின்றன.
ட்ரெய்ன் 18 வெற்றிகரமாக பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ட்ரெய்ன் 20 தயாரிப்பு தொடங்கும். ட்ரெய்ன் 20 அலுமினியத்தால் கட்டமைக்கப்படும். அலுமினியம் மிகவும் இலகுவாக இருக்கும் என்பதால் அதிக வேகம் செல்ல முடியும். அதே நேரம் எரிசக்தி பயன்பாடும் குறையும்.