இதுவரையில் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
New Delhi: நாட்டில் வெட்டுக்கிளிகளால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அவற்றால் விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விமானப் போக்குவரத்தை டி.ஜி.சி.ஏ. எனப்படும் விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகம் கவனத்தி வருகிறது. இதன் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
பொதுவாக வெட்டுக்கிளிகள் தாழ்வாக பறக்கும் தன்மை கொண்டவை. எனவே, விமானங்கள் புறப்பட்டுச் செல்லும்போதும், தரையிறங்க வரும்போதும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு ஏற்படும்.
விமானத்தின் இஞ்சின், ஏ.சி. கட்டுப்பாட்டு அறைகள் போன்றவற்றுக்குள் வெட்டுக்கிளிகள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதால் சிக்கல் உண்டாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வெட்டுக்கிளிகள் பறக்கும்போது, அவற்றின் வழியே விமானம் சென்றால் சென்ர்கள் பாதிக்கப்பட்டு, தவறான தகவல்கள் விமானிக்கு கிடைக்க கூடும். குறிப்பாக வேகம் மற்றும் உயரம் சார்ந்த அளவுகள் பாதிக்கலாம்.
அளவில் சிறியதாக இருந்தாலும், வெட்டுக்கிளிகள் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். அவை விமானியின் கவனத்தை திசை திருப்பும் திறன் மிக்கவை. அந்த நேரத்தில் வைப்பர் பயன்படுத்தி, வெட்டுக்கிளிகளை அப்புறப்படுத்தினாலும், கவனச்சிதறல்களை தவிர்க்க முடியாது.
இத்தகைய காரணங்களால், வெட்டுக்கிளிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது, விமானத்தை இயக்குவது சரியானதாக இருக்காது. அவை இரவில் பறக்காது என்பது, இந்த விவகாரத்தில் நமக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் செய்துள்ளன. இதுவரையில் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரோன், டிராக்டர்கள், லாரிகள் மூலம் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் விவசாயிகள் துயரம் அடைந்திருக்கும் நிலையில், வெட்டுக்கிளிகள் தாக்குதலால் அவர்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.