பாஜகவின் கோட்டையான குஜராத்தில் சில இடங்களை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.
Ahmedabad: மக்களவை தேர்தலுக்கான குஜராத் குழுவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைத்துள்ளார். இந்தக்குழுவுக்கு மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரஜீவ் சதாவ் தலைவராக இருப்பார். மொத்தம் 36 பேர் இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
குஜராத் மாநித்தில் மொத்தம் 26 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த முறை நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை கொடுத்தது. குறிப்பாக படேல் மற்றும் ஓபிசி பிரிவினரின் வாக்குகள் காங்கிரசுக்கு அதிகம் கிடைத்தன.
மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜகவின் கோட்டையான குஜராத்தில் அதிக சீட்டுகளை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தேர்தல் கமிட்டியை ராகுல் காந்தி அமைத்துள்ளார். இந்த கமிட்டிக்கு மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கும் ராஜிவ் சதாவ் தலைவராக இருப்பார்.
குழுவில் மூத்த காங்கிரஸ் தலைவரும், சோனியா காந்தியின் ஆலோசகருமான அகமது படேல் உள்பட 36 பேர் இடம் பெற்றுள்ளனர். பரத் சிங் சோலங்கி, அர்ஜுன் மோத்வடியா, சித்தார்த் படேல் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
தேர்தல் பணிக்குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் சட்டசபை தேர்தலின்போது காங்கிரசுக்கு ஆதரவு அளித்த அல்பேஷ் தாகூரும் இடம்பெற்றிருக்கிறார். இவருக்கு ஓபிசி பிரிவில் செல்வாக்கு உள்ளது. தற்போது அவர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.