பாஜக அதிமுக கூட்டணியிலும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலும் இடம்பெற்றுள்ளது.
Chennai: திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளின் உறவினர்கள் சிலர் மக்களவை தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மற்ற 19 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளன.
தேசிய கட்சிகளாக பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரசுக்கு தமிழகம் புதுவையில் மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 20 பேரில் 6 பேர் மூத்த நிர்வாகிகள் பிள்ளைகளாக இருக்கின்றனர். அதிமுகவில் இந்த எண்ணிக்கை 4-ஆக உள்ளது.
இது வாரிசு அரசியல் இல்லை என்றும், கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்கள், விசுவாசிகள், மக்கள் ஆதரவு கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இரு கட்சிகளும் இந்த விமர்சனங்களை மறுக்கின்றன.
திமுகவை பொறுத்தளவில் கருணாநிதியின் மகள் கனிமொழி, அவரது பேரன் தயாநிதி ஆகியோர் முறையே தூத்துக்குடி மற்றும் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகின்றனர். வடசென்னை தொகுதியில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி, திமுக மூத்த தலைவர் ஆர்காடு வீராசாமியின் மகன் ஆவார்.
இதேபோன்று கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியின் மகன். தென் சென்னை வேட்பாளர் சுமதி என்கிற தமிழச்சி தங்க பாண்டியன் மூத்த தலைவர் தங்க பாண்டியனின் மகள் ஆவார். திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் டி.எம். கதிர் ஆனந்துக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவை பொறுத்தளவில் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவந்திரநாத் குமார் நிறுத்தப்பட்டுள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் மீண்டும் தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் மகன் விவிஆர் ராஜ் சத்யன் தேர்தலில் போட்டியிடுகிறார். ராஜ் சத்யன் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக உள்ளார்.