அவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
New Delhi: மக்களவை தொடர்ந்து 4-வது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் பாதிக்கப்பட்டது. இந்த அமளிகளுக்கு மத்தியில் திருநங்கை மசோதா நிறைவேற்றப்பட்டது.
இன்று காலை அவை தொடங்கியதும், காவேரி விவகாரம், ரஃபேல் விவகாரம் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த அதிமுக, திமுக உறுப்பினர்கள் காவிரி விவகாரத்தை மக்களவையில் எழுப்பினர்.
இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் காணப்பட்டது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று மாநிலங்களவையில் திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் காவிரி விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒத்தி வைத்தார்.