This Article is From Jul 23, 2018

முற்றும் பாஜக- சிவசேனா மோதல்: அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி!

சிவசேனா, ‘2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்’ என்று கூறியுள்ளது குறிப்படத்தக்கது

Mumbai:

பாஜக தலைவர் அமித்ஷா, ‘2019 ஆம் நாடாளுமன்றத் தேர்தலை மகாராஷ்டிரா பாஜக-வினர் தனியாக சந்திக்கத் தயாராக வேண்டும்’ என்று வலியுறுத்திய நிலையில், அவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே. 

கடந்த வெள்ளிக் கிழமை மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், பாஜக-வின் கூட்டாளியான சிவசேனா அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, தீர்மானத்துக்கு முந்தைய நாள் பாஜக தலைவர் அமித்ஷா, உத்தவ் தாக்கரேவிடம் தனிப்பட்ட முறையில் ஆதரவு கோரியதால், கண்டிப்பாக அரசுக்கு ஆதரவாக சிவசேனா வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனா, நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திலேயே கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. இது அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. 

மேலும், சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’-விலும் சமீபத்தில், ‘நாட்டை ஆள்பவர்கள் கொலைகாரர்கள். மிருகங்களைக் காப்பாற்றி மனிதர்களை கொல்பவர்கள்’ என்று கடுமையான விமர்சனத்தை வைத்தது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது ராகுல் காந்தி பேசிய விதம் குறித்தும் சிசசேனா புகழாரம் சூட்டியது.

4jm1i0gg

இதையடுத்து தான் மகாராஷ்டிரா பாஜக-வினர் இடத்தில் அமித்ஷா, ‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும். அதற்கு ஏற்றாற் போல் வேலைகளை இப்போதே ஆரம்பியுங்கள்’ என்று கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உத்தவ் தாக்கரே, ‘நான் சாதாரண மனிதனின் கனவுக்காக போராடுகிறேன். பிரதமரின் கனவுக்காக அல்ல. நமக்கு ஒரேயொருவர் மட்டும் நண்பர் அல்ல. பொது மக்கள் தான் நமது நண்பர்கள்’ என்று கொதி கொதித்துள்ளார். 

கடந்த 30 ஆண்டுகளாள பாஜக- சிவசேனா கூட்டாக தேர்தல்களை சந்தித்து வருகின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதேபோல அடுத்து வந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலையும் ஒன்றாக சந்தித்தன இரு கட்சிகளும். ஆனால், பாஜக-வுக்கு தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைத்தது. பின்னர், இந்த ஆண்டு நடந்த மும்பை உள்ளாட்சித் தேர்தலை இரு கட்சிகளும் தனித் தனியே தேர்தலை சந்தித்தன. இந்நிலையில் தான் சிவசேனா, ‘2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்’ என்று கூறியது.

தற்போது பாஜக-வும் அதே நிலைப்பாட்டு வந்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

.