தேச விரோத அரசாக மோடி அரசு உள்ளதென்று கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
Chennai: நாட்டின் மதசார்பற்ற தன்மை, பொருளாதாரத்தை மத்தியில் ஆளும் பாஜக அழித்து விட்டதாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
என்.டி.டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கனிமொழி கூறியதாவது-
மத்திய பாஜக அரசை தேச விரோத அரசு என்றுதான் அழைக்க வேண்டும். மத்திய பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தை, மதசார்பற்ற தன்மையை அழித்து விட்டது.
மாநிலத்தில் செயல்படும் அதிமுக அரசு பாஜகவின் இன்னொரு அணியாக செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
ஏழை மக்கள் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அந்த ஆலையை மூட வேண்டும் என்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் ஆலைகள் நமக்கு தேவையில்லை. தீப்பெட்டி தொழிற்சாலை போன்ற குறு தொழில்கள் ஏராளம் உள்ளன. அவை இப்போது நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனை சரி செய்யும் நடவடிக்கையில் நான் ஈடுபடுவேன்.
இவ்வாறு கனிமொழி கூறினார். திமுகவில் பெண் வேட்பாளர்கள் 2 பேட் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டால் பல பெண்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று பதில் அளித்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதம் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.