கமல் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
Chennai: கமலின் நாக்கை அறுக்க வேண்டும். அவரது கட்சியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொதித்தெழுந்துள்ளார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.
கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும். தீவிரவாதிகளுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமும் கிடையாது. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார். பாஜக தமிழக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமலை கண்டிக்கிறேன். சிறுபான்மையினர் இருக்கும் இடத்தில் கமல் வன்முறையைத் தூண்டுகிறார். அவருக்கு எதிராக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இதேபோன்று, நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோர் கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.