பிரியங்கா காந்தியின் விமர்சனத்திற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
New Delhi: முன்னாள் ராஜீவ் காந்தியை பிரதமர் மோடி விமர்சித்த நிலையில், ஆணவத்தால் அழிந்த துரியோதனனை நினைவில் கொள்ளுங்கள் என்று பிரியங்காக காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நம்பர் ஒன் ஊழல்வாதி என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரியானாவில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் பிரியங்கா காந்தி மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது-
பேசுவதற்கு விஷயம் ஏதும் இல்லையென்றால், பாஜகவினர் எனது குடும்பத்தை அவமதிப்பை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆணவத்தை இந்தியா ஒருபோதும் மன்னித்தது இல்லை. இதற்கு வரலாற்றில் சான்றுகள் இருக்கின்றன.
மகாபாரதத்திலும் ஆதாரங்கள் உள்ளன. துரியோதனனிடமும் ஆணவம் இருந்தது. அதனால்தான் அவர் அழிந்தார். கிருஷ்ணர் துரியோதனன் முன்பு தோன்றி உண்மையை எடுத்துரைக்க முயன்றபோது கிருஷ்ணரையே கைது செய்ய துரியோதனன் முயன்றார்.
இவ்வாறு பிரியங்கா பேசினார்.
பிரியங்காவின் விமர்சனத்திற்கு பாஜக தரப்பில் இருந்து உடனடியாக பதிலடி வந்துள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூறியதாவது-
இந்த நாடு ஜனநாயக நாடு என்பதை பிரியங்கா உணர வேண்டும். யாரும் எவரையும் துரியோதனன் என்று கூறி விட்டால் அவர் அவ்வாறு மாறி விட மாட்டார். மே 23-ம்தேதி தேர்தல் முடிவுகள் வருகின்றன. அது பிரியங்காவுக்கு நல்ல பாடத்தை கற்பித்து தரும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.