லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை மகன் தேஜஸ்வி யாதவ் வழி நடத்தி வருகிறார்.
New Delhi: ஒரு நாளைக்கு பாகிஸ்தான் பெயரை 200 முறை மோடி உச்சரிப்பதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் கிண்டல் செய்துள்ளார். பாஜகவினர் 'காவல்காரன்' என பொருள்படும் சவுகிதார் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பை மோடிதான் உறுதி செய்ததாக பாஜகவினர் பிரசாரம் செய்கின்றனர். இதன்படி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களது பெயர்களுக்கு முன்பாக சவுகிதார் என்பதை பாஜக தலைவர்களும், தொண்டர்களும் சேர்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியை விமர்சித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பதிவில்,
'ஒருநாளைக்கு பாகிஸ்தான் பெயரை பிரதமர் மோடி 200 தடவை உச்சரிக்கிறார். பாகிஸ்தான் மீது மோடிக்கு அதிக அன்பு இருக்கிறதா?. பிரதமர் மோடி இந்தியாவைப் பற்றி பேச வேண்டும். அவர் இந்தியாவின் பிரதமர். தற்போது நடப்பது என்பது இந்தியாவின் பொதுத் தேர்தல். மோடி என்ன பாகிஸ்தான் தேர்தலிலா போட்டியிடுகிறார்?' என்று கூறியுள்ளார்.
பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையிலான கருத்து யுத்தம் வலுத்து வருகிறது. பாலகோட் தாக்குதலுக்கான ஆதாரங்களை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேட்கின்றன. இந்த தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்கிற விவரத்தை வெளியிடுமாறு அவை வலியுறுத்துகின்றன.
இருப்பினும் மத்திய அரசு தரப்பில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.