This Article is From Apr 05, 2019

8 முறை எம்.பியாக இருந்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தேர்தலில் போட்டியில்லை!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதியில் கடந்த 1989-ம் ஆண்டில் இருந்து சுமித்ரா மகாஜன் எம்.பி.யாக இருந்து வருகிறார்.

8 முறை எம்.பியாக இருந்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தேர்தலில் போட்டியில்லை!!

தேர்தலில் போட்டியிடாத அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட சீனியர் தலைவர்கள் பட்டியலில் சுமித்ராவும் இணைந்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சுமித்ரா மகாஜன் அறிவித்து விட்டார்
  • 8 முறை இந்தூர் மக்களவை தொகுதி உறுப்பினராக சுமித்ரா இருந்து வருகிறார்
  • 75 வயதை கடந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை
New Delhi:

ஒரே தொகுதியில் 8 முறை எம்.பி.யாக இருந்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதியில் கடந்த 1989-ம் ஆண்டில் இருந்து சுமித்ரா எம்.பியாக. இருந்து வருகிறார். 

பாஜகவை பொறுத்தளவில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. சீனியர் தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு இந்த தேர்தலில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பல்வேறு மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்து விட்டது. இந்தூர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்கவா வேண்டாமா என்ன செய்வது என்று பாஜக தலைமை தயக்கம் காட்டியது. 

ஏனென்றால் இந்தூர் தொகுதி எம்.பி.யாக இருக்கும் சுமித்ரா அதே தொகுதியில் 8 முறை தேர்வாகி இருப்பவர். இதனால், அவராக முன்வந்து ஏதேனும் அறிவிப்பு செய்வார் என்ற அடிப்படையில் பாஜக மவுனம் காத்து வந்தது. 

இந்த நிலையில், தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது-


இந்தூர் தொகுதிக்கு வேட்பாளரை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. எதற்காக இந்த தாமதம் என்று தெரியவில்லை. ஒருவேளை கட்சி தயக்கம் காட்டுகிறதா? இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களை நான் கலந்து ஆலோசனை செய்துவிட்டேன். 

இருப்பினும் இன்னும் முடிவுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. எனவே நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்கிற முடிவை எடுத்து விட்டேன். எனவே தயக்கம் ஏதுமின்றி இந்தூர் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளரை கட்சி தலைமை அறிவிக்கலாம். 

இவ்வாறு சுமித்ரா மகாஜன் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார். இந்தூரில்தான் கடைசியாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நாளாகும். நாடு முழுவதும் முடிவுகள் மே 23-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.