This Article is From Mar 27, 2019

காங்கிரசில் இணைந்தார் பிரபல இந்தி நடிகை! மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!!

மகாராஷ்டிராவில் அவர் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை ஊர்மிளா ட்வீட் செய்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • மும்பையில் நடிகை ஊர்மிளா போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
  • அரசியலில் முதல்படியை எடுத்து வைத்துள்ளதாக ஊர்மிளா கூறியுள்ளார்
  • மசூம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் ஊர்மிளா
Mumbai:

பிரபல இந்தி நடிகை ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ராகுல் காந்தி உடனான சந்திப்புக்கு பின்னர் இந்த தகவலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ராகுல் காந்தியிடம் ஊர்மிளா பூங்கொத்து வாங்குவது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியாகியுள்ளது. 

இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்மிளா. இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருப்பது மகாராஷ்டிர காங்கிரசார் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் மும்பையில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சியில் சேர்ந்தது குறித்து ஊர்மிளா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

அரசியலில் முதல் அடியை நான் எடுத்து வைத்துள்ளேன். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சர்தார் படேல் போன்றோரின் கொள்கைகளை எனது குடும்பத்தினர் பின்பற்றி வந்தனர். கல்வியறிவு பெற்ற குடும்பத்தில் பிறந்த நான், சினிமாத்துறையில் சேர்ந்தேன். ஆனால் சமூகத்தை பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் எனது இளம் பருவத்தில் இருந்தே எனக்கு இருக்கிறது. 
இவ்வாறு ஊர்மிளா கூறினார். 
 

mbhcdugg


ஊர்மிளா குழந்தை நட்சத்திரமாக கடந்த 1983-ல் மசூம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அவர் நடித்து 1995-ல் வெளிவந்த ரங்கீலா திரைப்படம் நல்ல வசூலையும், பெயரையும் பெற்றுத்தந்தது. 

சினிமாத்துறை மற்றும் அரசியல் குறித்து பேசிய ஊர்மிளா, ''சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வரும்போது, பிரபலம் காரணமாக அவர்கள் வாக்காளர்களை ஈர்ப்பார்கள் என்ற பேச்சு உள்ளது. நான் அரசியலுக்கு வரும்போது இதுபோன்ற எண்ணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறினார். 

மும்பையில் 6 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 29 முதல் தேர்தல் நடைபெறுகிறது. மும்பை வடக்கு தொகுதியில் ஊர்மிளா போட்டியிட்டால் அவர் பாஜகவின் பலம் மிக்க வேட்பாளரான கோபால் ஷெட்டியை எதிர்கொள்வார். 

.