வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.
New Delhi: பாஜக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் பெயர் இடம்பெறவில்லை. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் அடங்கிய பாஜக உயர் மட்டக்குழு கூட்டத்தில் 184 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அத்வானி போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார். நாக்பூரில் நிதின் கட்கரியும், லக்னோவில் ராஜ்நாத் சிங்கும் போட்டியிடுகின்றனர்.
அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் வி.கே. சிங் காஜியாபாத் தொகுதியிலும், ஹேம மாலினி மதுராவிலும், சாக்ஷி மகராஜ் உன்னாவோவிலும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே போட்டியிடவில்லை. அவரது மகன் துஷ்யந்த் 4-வது முறையாக போட்டியிடுகிறார்.
முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா இன்று அறிவித்தார். உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 28 வேட்பாளர்களின் பெயரும், கர்நாடகாவில் 21, மகாராஷ்டிராவில் 16, ராஜஸ்தானில் 16, கேரளாவில் 13, ஒடிசாவில் 10, தெலங்கானாவில் 10, அசாமில் 8, தமிழ்நாட்டில் 5, சட்டீஸ்கரில் 5, ஜம்மு காஷ்மீரில் 5, உத்தரகாண்டில் 5, அருணாச்சல பிரதேசத்தில் 2, திரிபுராவில் 2, ஆந்திராவில் 2, குஜராத், சிக்கிம், மிசோரம், லட்சத்தீவு, தாத்ரா நாகர் ஹவேலியில் தலா ஒரு என மொத்தம் 184 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ம்தேதி தொடங்கி மே 23-ம்தேதி வரை நடைபெறுகிறது.