தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
New Delhi: நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு தகவலில் தெரியவந்துள்ளது.
இந்த கருத்து கணிப்புகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்பட்டவை. அவற்றின் அடிப்படையில், பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிய வருகிறது.
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு கிடைத்த 44 இடங்களை விடவும் இரு மடங்கு இடமான 88 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.
காங்கிரஸ கூட்டணி 140 தொகுதிகளில் வெற்றி பெறலாம் மற்ற கட்சிகள், சுயேச்சைகள் உள்ளிட்டோரை கணக்கிடும்போது அவர்களுக்கு 129 தொகுதிகள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தளவில் 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் ஒரு கட்சி ஆட்சியை பிடிப்பதற்கு 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி முக்கிய விளைவை எற்படுத்தும். அவர்களுக்கு மொத்தம் 36 தொகுதிகள் வரை கிடைக்கும். கடந்த 2014 மக்களவை தேர்தலில் 71 இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு உத்தர பிரதேசத்தில் மொத்தம் 40 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
பீகாரை பொறுத்தளவில் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 40 இடங்களில் 31-யை கைப்பற்றும். இங்கு காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு 9 இடங்கள் வரை கிடைக்கும்.
தென் மாநிலங்களில் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், தெலங்கானாவில் சந்திர சேகர ராவின் தெலங்கான ராஷ்டிரிய சமிதி கட்சியும் அதிக இடங்களில் வெற்றி பெறலாம்.
ஆந்திராவில் ஜெகனுக்கு 25-ல் 21 இடங்கள் கிடைக்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. ஆளும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சிக்கு 4 சீட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தெலங்கானாவை பொறுத்தளவில் 17 மக்களவை தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 14 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் நாளை மறுதினம் தொடங்கும் மக்களவை தேர்தலில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முடிவுகள் மே 23-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன.
கவனிக்க... : தேர்தல் கருத்துக் கணிப்பு பலமுறை தவறாக அமைந்திருக்கிறது.