This Article is From Mar 27, 2019

மக்களவை தேர்தல் : 4 முனைப் போட்டியில் மத்திய சென்னை தொகுதி!!

இந்த முறை அதிமுக கூட்டணி முழுவதுமாக தோற்கடிக்கப்படும் என்று திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் : 4 முனைப் போட்டியில் மத்திய சென்னை தொகுதி!!

தமிழகத்தில் தற்போது மோடி எதிர்ப்பலை பலமாக வீசுகிறது என்று தயாநிதி கூறியுள்ளார்.

Chennai:

மக்களவை தேர்தலில் மத்தியசென்னை தொகுதியில் 4 முனைப் போட்டி காணப்படுகிறது. இங்கு திமுக வேட்பாளராக போட்டியிடும் தயாநிதி மாறன் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனான தயாநிதி மாறன் கடந்த 2014-ல் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். தற்போது இந்த தொகுதி அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த 2004 முதல் 2009 வரை மத்திய சென்னை மக்களவை தொகுதியின் உறுப்பினராக தயாநிதி இருந்தார். தற்போது இங்கு 4 முனைப் போட்டி காணப்படுகிறது. இந்த முறை திமுகவின் தயாநிதி மாறன், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் சாம் பால், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கமீலா நாசர் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தெஹ்லான் பாகவி ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். 

2014-ல் திமுகவும் காங்கிரசும் தனித்தனியே போட்டியிட்டன. தற்போது இரு கட்சிகளும் கூட்டணி அமைத்திருக்கின்றன. காங்கிரசுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 

வேட்புமனுத் தாக்கலுக்கு பின்னர் என்.டி.டி.வி.க்கு பேட்டியளித்த தயாநிதி மாறன், ''எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளார். தமிழகத்திற்கு எதுவும் செய்யாததால் பிரதமர் மோடிக்கு எதிரான அலை தமிழகம் முழுவதும் வீசுகிறது. அவர் கஜா புயல் வந்தபோது தமிழகம் வரவில்லை. தேர்தல் நேரத்தில் விளம்பரத்திற்காக மட்டும் அவர் வந்து அடிக்கல்லை நாட்டுகிறார்'' என்று கூறினார். 

கடந்த 2014 தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. ஆனால் தற்போது பாமக, பாஜக, தேமுதிகவின் வாக்குகள் அக்கட்சிக்கு செல்லும் என்பதால் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை தொகுதியில் கடும் சவால் காத்திருக்கிறது. 

.