This Article is From Feb 13, 2019

பாஜக - அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக தகவல்! - 19-ம்தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு

அதிமுக அமைச்சர்கள் சிலர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக - அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக தகவல்! - 19-ம்தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக பலவீனம் அடைந்து விட்டதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

Chennai/New Delhi:

மக்களவை தேர்தலையொட்டி தமிழகதத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. 

வரும் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார். அப்போது கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த மாதம் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், ''பாஜகவுடன் கூட்டணி வைப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி சரியான போக்கை கடைபிடிக்கவில்லை'' என்று கூறியிருந்தார். 

அதே நேரத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய அரசை தொடர்ந்து தாக்கிப் பேசி வருகிறார். இதனால் கடந்த சில வாரங்களாக அதிமுகவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து குழப்பமான நிலையே காணப்பட்டது. 

இந்த நிலையில் நம்பத் தகுந்த வட்டாரங்கள் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி விட்டதாக தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியான திமுக இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் என ஏற்கனவே அறிவித்திருக்கிறது. 

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோருடன் அதிமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் 3 பேரும் இந்த வாரத்தில் தமிழகம் வருகின்றனர். இந்த தகவலானது அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி ஏற்படும் என்பதை மேலும் உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது. 

.