This Article is From Apr 15, 2019

தமிழகத்தில் நாளையுடன் ஒய்கிறது தேர்தல் பிரசாரம்! - தீவிர சோதனையில் பறக்கும் படை!

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

தமிழகத்தில் நாளையுடன் ஒய்கிறது தேர்தல் பிரசாரம்! - தீவிர சோதனையில் பறக்கும் படை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இதேபோல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன.

இதுதவிர அதிமுகவில் இருந்து பரிந்து வந்த அமமுக இந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதேபோல், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இந்த தேர்தலை எதிர்கொள்கிறது.

தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆட்சி அமைவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தவகையில், இரு பெரும் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸூம் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இப்படி இருக்க, தேர்தல் தேதி நெருங்கி வர தமிழகத்தில் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கோவை, தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார். திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சேலம், கிருஷ்ணகிரி, தேனி, மதுரை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார். தமிழகத்தில் வருகிற 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு பிரசாரம் முடிவடையும். அதன்படி, தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் உடனடியாக பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடைசி 2 நாட்களில்தான் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படும் என்பதால், இதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

.