தனது வெற்றியை பாஜக பறிக்க முடியாது என்கிறார் கனிமொழி.
New Delhi: தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் நடந்தது வருமான வரி சோதனை அல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேறு சில காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டிற்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு 2 நாட்கள் முன்பாக கடந்த செவ்வாயன்று கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். இது சோதனையாக கூறப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர்களுக்கு வழங்க பணத்தை கனிமொழி பதுக்கி வைத்ததாகவும், இதுதொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் பரவின.
இந்த நிலையில் கனிமொழி வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் செலவுக் கணக்குகளை உறுதி செய்து கொள்வதற்காக போலீசாருடன், வருமான வரி அதிகாரிகள், பறக்கும் படையினர் உள்ளிட்டோர் கனிமொழி வீட்டிற்கு சென்றனர் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கையின்போது ஆட்சேபனைக்குரிய பொருள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்தபோது திமுக தொண்டர்கள் கனிமொழி வீட்டின் முன்பாக அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் தோல்வி பயத்தால் பாஜக இதுபோன்ற வேலைகளை செய்வதாக கூறியிருந்தார்.