பாஜக வேட்பாளர் அனுபம் ஹஸ்ராவை தனது சகோதரர் என்று காலி அழைத்துள்ளார்.
Jadavpur: பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காலி, மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அனுபம் ஹஸ்ராவை ஆதரித்து காலி பிரசாரம் செய்தார்.
WWE எனப்படும் வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெய்ன்மென்ட் மல்யுத்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிப் பார்க்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த போட்டி உள்ளது.
இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கிரேட் காலி, 7 அடி உயரத்தில், பிரமாண்ட உருவத்துடன் ரசிகர்களை கவர்ந்து வந்தார். தலிப் சிங் ராணா என்ற இயற்பெயர் கொண்ட கிரேட் காலி, இமாசல பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அனுபம் ஹஸ்ராவை ஆதரித்து பிரசாரம் செய்தார். இளஞ்சிவப்பு டி ஷர்ட், கூலிங் கிளாஸ், கழுத்தில் மாலை அணிந்து கொண்டு திறந்த ஜீப்பில் சென்ற காலி, பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.
இதுகுறித்து கிரேட் காலி கூறுகையில், ‘எனது இளம் சகோதரர் அனுபம் ஹஸ்ராவுக்கு பிரசாரம் செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து வந்தேன். அனுபம் படித்தவர். திறமை கொண்டவர். மற்றவர்களை விட சரியான நபராக அவர் இருப்பார். எனவே வாக்குகளை மற்றவர்களுக்கு அளித்து வீணடிக்காமல் அனுபமிற்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
பாஜக வேட்பாளர் அனுபம் பேராசிரியராக இருந்து வருகிறார். அவர் திரிணாமூல் காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்டிருக்கும் நடிகை மிமி சக்ரவர்த்தியை எதிர்த்து களத்தில் நிற்கிறார்.
ஜாதவ்பூர் தொகுதி வரலாற்றில் இடம்பெற்ற மக்களவை தொகுதியாகும். 1984-ல் இங்கு நடந்த தேர்தலின்போதுதான், சோம்நாத் சாட்டர்ஜியை தோற்கடித்து மம்தா பானர்ஜி முதன் முறையாக எம்.பி. ஆனார்.