General elections 2019: கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்கிறார் முதல்வர்.
Chennai: கருத்துக்கணிப்புகளின் தமிழக நிலவரம் பொய்யானவை என்று தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் 23-ம்தேதி வெளியாகின்றன. இதையொட்டி தேசிய ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதன்படி மொத்தம் தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி 302 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 122 இடங்களிலும் மற்ற கட்சிகள் 118 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தமிழகத்தை பொறுத்தளவில் திமுக போட்டியிட்ட 38 தொகுதிகளில் 34 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு கருத்துக்கணிப்பில் 27 இடங்கள் வரைக்கும் திமுக வசம் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணி அதிகபட்சம் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
2016-ல் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு வெளியானது. அப்போது சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெறும் என்றார்கள். நானே தேர்தலில் தோற்றுப்போவேன் என்றுதான் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.
ஆனால் சேலம் மாவட்டத்தில் அதிகமாக 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். கருத்துக் கணிப்பு தெரிவித்த 3 இடங்களுக்கு பதிலாக சேலம் மாவட்டத்தில் அதிமுக 10 இடங்களில் வெற்றி பெற்றது. கருத்துக்கணிப்புகள் இவ்வாறுதான் இருக்கும். இவை கருத்துக் கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு.
நான் கூறியது தமிழக நிலவரம் மட்டுமே. மற்ற மாநில நிலவரம் எனக்கு தெரியாது. தமிழகத்தை பொறுத்தளவில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற 22 இடங்களிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.