பிரதமர் வேட்பாளராக தன்னை தானே சி.எஸ்.கர்ணன் அறிவித்துள்ளார்.
Chennai: மத்திய சென்னை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஓய்வு பெற்ற முன்னாள் சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார்.
கடந்த வருடம் தான் தொடங்கிய ஆண்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி கட்சியின் சார்பில் வேட்பாளராக கர்ணன் களமிறங்குகிறார்.
சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து, அவர் மீது அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததால், அவரை கைது செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, 6 மாத சிறைத்தண்டனைக்கு பிறகு, டிசம்பர் மாதம் விடுதலை ஆனார்.
திமுக மற்றும் அதிமுக இன்னும் தமிழகம் மற்றும் புதுச்சேரியை தாண்டாத நிலையில், எனது கட்சி சார்பில் நாடு முழுவதும் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தன்னை தானே பிரதமர் வேட்பாளர் என்றும் அறிவித்துக்கொண்டார்.
இதேபோல், அதிமுக மற்றும் திமுக ஏன் தங்களது பிரதமர் வேட்பாளரை அறிமுகப்படுத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.