This Article is From May 16, 2019

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்: பாஜக பிரமுகர் பிரக்யா தாகூர் கருத்து!

மக்களவைத் தேர்தல் 2019: நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இன்னும் இருப்பார் என்று பிரக்யா தாகூர் கூறியுள்ளார்.

General elections: நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர் கருத்து.

New Delhi:

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே, ஒரு தேசபக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர் கருத்து கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிறன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், நமது நாட்டு தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறங்களும் பல்வேறு நம்பிக்கைகளை குறிக்கின்றன.

இந்த சமநிலையால் பெருமைப்படும் இந்தியர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். இந்த மூன்று நிறங்களும் சரியாக இருக்க வேண்டும். அதனால் இங்குள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் விருப்பமாக இருக்க வேண்டும்.

முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார்.

அதில், நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இன்னும் இருப்பார். அவரை தீவிரவாதி என்று அழைப்பவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசன் பேச்சுக்கு பயங்கர எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

.