தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.
இதேபோல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன.
இதுதவிர அதிமுகவில் இருந்து பரிந்து வந்த அமமுக இந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதில், இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால், ஆர்கேநகரில் போட்டியிட்டு குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னத்தையே ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார். ஆனால், அதை தேர்தல் ஆணையம் வழங்க மறுத்ததால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் பதிவு செய்யப்படாத கட்சிக்கு ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்க கோர முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதையடுத்து, குக்கர் சின்னம் வழங்க வேண்டும் என்ற அமமுகவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. எனினும், அமமுக ஒரே அமைப்பாக செயல்படுவதால், அதனை கட்சி போன்று கருதி பொதுச் சின்னம் வழங்க பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில் அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அமமுகவின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவான சின்னமாக இது வழங்கப்பட்டுள்ளது.